4.1.12

உயிரோசையில் வெளியான எனது கவிதை.




வட்டக்கவிதைகள்
சதுரக்கவிதைகள்
செவ்வகக்கவிதைகள்
முக்கோணக்கவிதைகள்
செங்குத்துக்கவிதைகள்
அடுக்குக்கவிதைகள்
என ஏதாவதொரு வடிவத்தில்
எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்
நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியது
இதய வடிவினாலான ஒரு கவிதையைத்தான்
அது இன்னும் முற்றுப்பெறாமல்
பாதி வடிவத்திலேயே இருக்கிறது.

உயிரோசையில் வெளியான எனது கவிதை.




ஆழ்ந்த நித்திரையில்
இருக்கிறேன்

நித்திரையில் நீளும் கனவில்
இருக்கிறேன்
நீளும் கனவில் விழிப்பில் 
இருக்கிறேன்
விழிப்பில் கவனக்குவிப்பில் 
இருக்கிறேன்
கவனக்குவிப்பில் விழிப்பில் 
இருக்கிறேன்
விழிப்பில் நீளும் கனவில் 
இருக்கிறேன்
நீளும் கனவில் நித்திரையில் 
இருக்கிறேன்.

16.12.11


எங்கள் இனக்குழு

இந்தநாடு முழுக்க

பரவியிருந்தது


பெண்களை பூசித்தோம்

அறிவையே செல்வமாய்க் கருதினோம்

மன்னனை மக்களின் அடிமை என்றோம்

விலங்குகளை நண்பர்களாக்கினோம்

உதவுகிறவனை உயர்வாய் எண்ணினோம்


யாரோ எதுவோ துரத்தியிருக்க

எங்கிருந்தோ மூச்சிரைக்க ஓடிவந்தது

ஒரு புதிய இனக்குழு

முதலில் இருக்கவும் பிறகு

படுக்கவும் இடம் கொடுத்தோம்


அவர்கள் எங்களைப் போலில்லை

தோல் வெளுப்பாய் இருந்தார்கள்

 புதிய மொழி பேசினார்கள்

 ஓடிவரும்போதே தங்கள்

கடவுளையும் கூட்டி வந்தார்கள்


அவர்களின் கடவுளைக்காட்டிப்

பயமுறுத்தினர்

அவர்களின் கடவுள் அற்புதங்களை

நிகழ்த்துமெனச் சொன்னார்கள்

அவர்களின் மொழியும் கடவுளும்

எங்களைப் பயமுறுத்தின


தங்கள் கடவுளை வணங்கச் சொன்னார்கள்

வணங்கினோம்

அவர்களின் மொழிகொண்டு

கடவுளிடம் பேசுவதாய் சொன்னார்கள்

நம்பினோம்

கடவுளுடன் அவர்கள் பேச

எங்களிடம் கூலி கேட்டார்கள்

கொடுத்தோம்.


எங்கள் நிலங்களை

அபகரித்து துரத்தியடித்தார்கள்

ஓடிவந்தோம்

நாங்கள் எதிர்க்கவில்லை

அவர்களை எதிர்க்க எங்களிடம்

கடவுள் எவருமில்லை


எதற்கோ ஆசைப்பட்டு

எங்கள் இனக்குழு சாம்ராஜ்யங்களை

இழந்ததாய்ச் சொன்னார்கள்

வரலாற்றை ஆராய்ந்தவர்கள்
எதற்கு ஆசைப்பட்டோம் என்பதை

அவர்களால் சொல்ல முடியவில்லை

எங்களுக்கும் தெரியவில்லை.

கடவுள் இல்லையென்று சொல்லித்திரிந்த

கருப்புச்சட்டைக்காரனொருவன் 

கனவில் ஏதோ காட்சி தந்ததென
கருப்புச்சட்டை வேட்டியோடு புதிதாக

மாலையும் போட்டுக்கொண்டான்.


'நேத்து வரைக்கும் நல்லாத்தேன்' இருந்த

கொமரேசன் மவன் சேகரை

காந்தக்கண் பெண்ணொருத்தி கழுத்தறுத்தாளாம்

ஆடைகளைக் கிழித்துக்கொண்டு
அழுக்குடலோடு சாலைகளில் திரிகிறான்.





15.12.11




என் வாழ்வைப் போலவே 

ஓடிக்கொண்டிருக்கிறது 

நான் பார்க்க நேரிடும் நதி.


22.11.11





மனிதர்கள்

இல்லாத ஊரில்


குடியிருப்பதில்லை


கடவுள்.




உன்னைப்பற்றிய 

நினைவுகளுக்கு


உன் அனுமதி


தேவையில்லை என்பது


எத்தனை வசதியாயிருக்கிறது.....