22.11.11





மனிதர்கள்

இல்லாத ஊரில்


குடியிருப்பதில்லை


கடவுள்.




உன்னைப்பற்றிய 

நினைவுகளுக்கு


உன் அனுமதி


தேவையில்லை என்பது


எத்தனை வசதியாயிருக்கிறது.....




அச்சிலேற்ற

தகுதியற்றதாய்


திருப்பி அனுப்பப்படுகிற 


கவிதைகள் அனைத்தும்

 
உன்னையும் என்னையும்


பற்றியதாய் இருக்கின்றன.




என்னைக் கடந்து

செல்கிறார்கள் சிலர்.



சிலரைக் கடந்
து 


செல்கிறேன் நான்.





இதழ்கள் பிரித்து 

பேசத் தொடங்குகிறது


முத்தம்.



காதலாகிறது


காமம்


காமமாகிறது


காதல்.




இவன் சிரிக்கிறான்

இவன் ரசிக்கிறான்


இவன் காதலிக்கிறான்


இவன் ஏமாறுகிறான்


இவன் கோபம் கொள்கிறான்


இவன் கவிதை எழுதுகிறான்



இவன் இவனை வேடிக்கை 


பார்க்கத் தொடங்குகிறான்.



பின்னொருநாள் இவன் இவனை


உணர்ந்துவிட்டதாய் இவனிடமே 


சொல்லிக்கொள்கிறான்.




தூண்டிலிட்டு மீன்பிடிக்கச் செய்யப்படும்

பிரயத்தனங்கள் அசாதாரனமானவை



ஆசைப்படும் மீனின் அளவுக்கேற்ப


நரம்பும் முள்ளும் இருப்பதும் அவசியம்

 

சின்ன மீனென்றால் புழுவையோ


பெரிய மீனென்றால் சின்ன மீனையோ


லாவகமாய் முள்ளில் செருகத்


தெரிந்திருக்க வேண்டும்



அசையும் தக்கையைக் கொண்டே


அது என்ன மீன் என்பதைச்

 
சொல்லிவிடும் திறனும் அவசியம்



ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மாதிரி


என்பது முக்கியமான தூண்டில் கோட்பாடு



மெதுவாக இழுப்பது வேகமாக இழுப்பது


சுண்டி இழுப்பது சுருக்கி இழுப்பது 


என்பவைகளையும் கற்றிருத்தல் நலம்



சிதைவுறாமல் முள்ளிலிருந்து


விடுவிப்பது எப்படி என்பதை


பார்த்துப் பழகுவதே சிறப்பு



பிடித்த மீன்களை மீண்டும்


நீரிலேயே விட்டுவிடுவதோ

 
சமைக்க வீட்டுக்கு எடுத்துச் செல்வதோ


அல்லது நண்பர்களிடம் கொடுத்துவிடுவதோ


உங்கள் விருப்பம் அதிலொன்றும்


கட்டுப்பாடுகள் இல்லை



இவற்றையெல்லாம் விட


முக்கியமானது நீங்க
ள் 


மீன்கள் சுவாசிப்பது பற்றியும்

அவைகள் நீந்துவது பற்றியும்

 
யோசிக்காதவராய் இருக்க வேண்டும்.







நேற்றிரவு 

தூக்கிட்டுக் கொண்டேன்.



மரணத்துக்குப் பிறகும்


வாழ்வு


எப்போதும்போல்தான்


இருக்கிறது.

கனவென்று


உணர்ந்ததைத் தவிர.


நேற்று நல்லவன்

இன்று கெட்டவன்

நாளை மீண்டும்

நல்லவனாகிவிடுவேன்.


8.11.11



கடைசியாக 

சில முத்தங்களைத் 
தந்தாள்


பழைய முத்தங்களைப்
போலில்லை அவை.

3.11.11

ஒரு பயணம் ஒத்திவைக்கப்படுகிறது
ஒரு வாக்குறுதி ஏமாற்றப்படுகிறது
ஒரு காதல் மறுக்கப்படுகிறது
ஒரு தற்கொலை தடுக்கப்படுகிறது
ஒரு செய்தி மறைக்கப்படுகிறது.


கடந்துவிட்ட
எல்லா கணங்களிலும்
 

வேறொரு சம்பவம்
நிகழ்ந்து விடுகிறது.






ஒரு பொய்யை வெளியிடுகிறேன்.

அது இன்னொரு பொய்யாக
அவநம்பிக்கையாக
துரோகமாக
தீராப்பகையாக

வன்முறையாக

என்னிடம் திருப்பித் தரப்படுகிறது.


இனி

இந்தப்பொய்களைக் கைவிடலாம்.

அல்லது

அன்பைத் தருகிற

ஒரு பொய்யைத் தேடிப்பார்க்கலாம்.


2.11.11


தேவதைகளைக் காதலிப்பவர்கள்

தேவகுமாரர்களாய்

இருப்பதில்லை.


கடைசியில் 

மழையிடம்


எனது காதலைச் சொல்லிவிட்டேன்.


அது 


இன்னும் அழகாய்ப்

பெய்துகொண்டிருக்கிறது.







வெயிலோடு கோபித்துக் கொள்வதைப்போல
மழையோடு கோபிக்க முடிவதில்லை.


கோபமென்றாலும் அது செல்லக் கோபம் தான்.