7.9.11


உயிரை விட்டுப் 
பிரிந்து செல்வதென்பது
இத்தனை இலகுவாயிருக்கும் 
என்பதை இதற்குமுன்பு 
நான் அறிந்திருக்கவில்லை.

எத்தனையோ முறை 
முயற்சித்திருக்கிறேன்.
அத்தனை முறையும் 
என் நோக்கம் செத்துப் போவதல்ல.
'நான் சாகத் துணிந்தவன்' 
அல்லது 
'உயிர் வாழ்தலில் ப்ரியமில்லாதவன்' 
என்பதை 
எல்லோருக்கும் உணர்த்தவே.
குறிப்பாக என் தோழிகளுக்கு.


ஒருமுறை 
எறும்புகளைச் சாகடிக்கும் 
மருந்தை குறைந்த அளவில் 
இனிப்பான குளிர்பானத்தில் 
கலந்து குடித்தேன்.


மழுங்கிப் போன பிளேடால் 
கை நரம்புகளில் பட்டிடாதவாறு 
அறுத்துக் கொண்டிருக்கிறேன்.


ஆட்கள் சூழ்ந்திருந்த 
தருணத்தில் 
தூக்கிட்டுக் கொள்ள
முயற்சித்தேன் ஒருமுறை.


மண்ணெண்ணெய் வாங்கத்
தெரிந்தவனுக்கு 
ஒரு தீப்பெட்டி வாங்கத் தெரியாதா?
தேவைக்கதிகமாகவே
ஊற்றிக்கொண்டு
எல்லோரிடமும் 
தீப்பெட்டி கேட்டிருக்கிறேன்.


ஒவ்வொரு முறை 
முயற்சிகளுக்கு முன்பும் 
நான் சாகும் முயற்சியில் 
இருக்கிறேன் என்பதற்கான 
அறிகுறிகளை என் நண்பர்களுக்கு 
உணர்த்திவிட மறப்பதில்லை.



இன்று காலை,
இதுவரை எதிர்பார்த்தேயிராத
ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
மெதுவாகச் ஓட்டிச்சென்ற 
என் இருசக்கர வாகனத்தின் மீது
சரக்குந்து ஒன்று
போகிற போக்கில்
இடித்துத்தள்ளி விட்டு
சென்றுவிட்டது.



கடைசிக்கணத்தில்,
'வாழ்ந்துவிடும் ஆசை'யை
என் மூளைக்குச்
சொல்லிக் கொண்டிருந்தது
இன்னும் நினைவிலிருக்கிறது.

இறப்பைக்குறித்து
நான் கணித்திருந்திருந்த
அத்தனையும்
தப்பாகிப்போனதை
இப்போது உணர்கிறேன்.
நான் யோசித்திருந்த 
எதுவுமே உண்மையில்லை.
நீங்கள் யோசிப்பதும் 
அப்படியே இருக்கலாம்.

உயிரை விட்டுப் 
பிரிந்து செல்வதென்பது
இத்தனை இலகுவாயிருக்கும் 
என்பதை இதற்குமுன்பு 
நான் அறிந்திருக்கவில்லை.