18.5.04

கடவுள்


சிறுவயதில்,

கடவுளைப் பற்றிய

பயமிருந்தது எனக்கு.

ஒரு ஆவணிமாத வெள்ளிக்கிழமையில்

முன்னிரவுக்குப் பிந்தைய பொழுதில்

அரிக்கேன் விளக்குகளின்

மங்கிய வெளிச்சத்தில்

வெட்டுப்பட்ட ஆட்டின்

இரத்தம் பீறிடும் கழுத்தில்

வாய் வைத்திருப்பார்

ஆவேசங்கொண்ட பூசாரி.

பக்கத்துப் பெரிய

பூவரச மரத்துக்குப் பின்னால்

ஒளிந்து கொள்வேன் நான்.

3.5.04

காதல்

நிராசைகள்

ஏமாற்றங்கள்

அவமானங்கள்

இழப்புகள்

தோல்விகள்

இவற்றுடனே

ஏற்கப்படாத

காதலும்.

நினைப்பதற்காகவோ

அல்லது

மறப்பதற்காகவோ.

8.3.04

கடைசிக்கடிதம்

உனக்கான எனது கடைசிக்கடிதம்

கொண்டு வருகிறேன்.

வழக்கம்போலவே,

இதையும் நிராகரித்துவிடு.

வசவுச்சொற்களால் அவமானப்படுத்து.

இல்லையேல்,

உனக்குத் தோன்றுகிற

விதத்தில் தண்டித்துவிடு.

ஒருவேளை,

இவையெல்லாம் விடுத்து,

நீ என்னை நேசிப்பதாய்ச்

சொல்லிவிட்டால்,

உன் மீதான என் நேசம்

தொலையக் கூடும்.