2.11.11


தேவதைகளைக் காதலிப்பவர்கள்

தேவகுமாரர்களாய்

இருப்பதில்லை.


கடைசியில் 

மழையிடம்


எனது காதலைச் சொல்லிவிட்டேன்.


அது 


இன்னும் அழகாய்ப்

பெய்துகொண்டிருக்கிறது.







வெயிலோடு கோபித்துக் கொள்வதைப்போல
மழையோடு கோபிக்க முடிவதில்லை.


கோபமென்றாலும் அது செல்லக் கோபம் தான்.

29.10.11


வானமெங்கும்
பறந்து திரிய 
போதிய பலமில்லாதவை 
எனது இறக்கைகள்
என்பதை உணர்ந்திருந்தேன்.


பறக்க வேண்டும்
சுதந்திரமாய் பறக்க வேண்டும்
பலத்துடன் பறக்க வேண்டும்.
முடிவெடுத்தேன்

உயரத்துக்கும்
அகலத்துக்கும்
அளவுகள் வகுத்தேன்.

பறக்க முடிந்த 
தூரத்தை 
எல்லைகளாக்கினேன்.

என்னுடைய 
வானத்தை 
நானே உருவாக்கினேன்.

என் வானத்தினுள்
என்னைப் போலவே 
எவரும் பிரவேசிக்கலாம்.
எல்லைக்கோடுகளையும்
வரைந்து கொள்ளலாம்.

ஆனாலும் இது என் வானம்.
நானொரு சுதந்திரப் பறவை.






7.9.11


உயிரை விட்டுப் 
பிரிந்து செல்வதென்பது
இத்தனை இலகுவாயிருக்கும் 
என்பதை இதற்குமுன்பு 
நான் அறிந்திருக்கவில்லை.

எத்தனையோ முறை 
முயற்சித்திருக்கிறேன்.
அத்தனை முறையும் 
என் நோக்கம் செத்துப் போவதல்ல.
'நான் சாகத் துணிந்தவன்' 
அல்லது 
'உயிர் வாழ்தலில் ப்ரியமில்லாதவன்' 
என்பதை 
எல்லோருக்கும் உணர்த்தவே.
குறிப்பாக என் தோழிகளுக்கு.


ஒருமுறை 
எறும்புகளைச் சாகடிக்கும் 
மருந்தை குறைந்த அளவில் 
இனிப்பான குளிர்பானத்தில் 
கலந்து குடித்தேன்.


மழுங்கிப் போன பிளேடால் 
கை நரம்புகளில் பட்டிடாதவாறு 
அறுத்துக் கொண்டிருக்கிறேன்.


ஆட்கள் சூழ்ந்திருந்த 
தருணத்தில் 
தூக்கிட்டுக் கொள்ள
முயற்சித்தேன் ஒருமுறை.


மண்ணெண்ணெய் வாங்கத்
தெரிந்தவனுக்கு 
ஒரு தீப்பெட்டி வாங்கத் தெரியாதா?
தேவைக்கதிகமாகவே
ஊற்றிக்கொண்டு
எல்லோரிடமும் 
தீப்பெட்டி கேட்டிருக்கிறேன்.


ஒவ்வொரு முறை 
முயற்சிகளுக்கு முன்பும் 
நான் சாகும் முயற்சியில் 
இருக்கிறேன் என்பதற்கான 
அறிகுறிகளை என் நண்பர்களுக்கு 
உணர்த்திவிட மறப்பதில்லை.



இன்று காலை,
இதுவரை எதிர்பார்த்தேயிராத
ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
மெதுவாகச் ஓட்டிச்சென்ற 
என் இருசக்கர வாகனத்தின் மீது
சரக்குந்து ஒன்று
போகிற போக்கில்
இடித்துத்தள்ளி விட்டு
சென்றுவிட்டது.



கடைசிக்கணத்தில்,
'வாழ்ந்துவிடும் ஆசை'யை
என் மூளைக்குச்
சொல்லிக் கொண்டிருந்தது
இன்னும் நினைவிலிருக்கிறது.

இறப்பைக்குறித்து
நான் கணித்திருந்திருந்த
அத்தனையும்
தப்பாகிப்போனதை
இப்போது உணர்கிறேன்.
நான் யோசித்திருந்த 
எதுவுமே உண்மையில்லை.
நீங்கள் யோசிப்பதும் 
அப்படியே இருக்கலாம்.

உயிரை விட்டுப் 
பிரிந்து செல்வதென்பது
இத்தனை இலகுவாயிருக்கும் 
என்பதை இதற்குமுன்பு 
நான் அறிந்திருக்கவில்லை.



2.8.11

தமிழனின் கணிதம்.



ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, 


விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்,

அதாவது, 6வது நூற்றாண்டிலேயே புதையனார் என்ற தமிழர் 



செங்கோன முக்கோணத்தில்

கர்ணத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் எளிய வழியைக் கண்டறிந்தார்.

அவர் எழுதிய கணிதப் பாடல்.

"ஓடிய நீளந்தன்னை

ஓரெட்ட்டுக் கூறதாக்கி

கூறிலே ஒன்று தள்ளி

குன்றத்தில் பாதி சேர்த்தால்

வருவது கர்ணம்தானே".

**************************************

அதாவது பிதாகரஸ் தேற்றம்:

A² + B² = C²

3^2 + 4^2 = 5^2

9 + 16 = 25

25 = 25

C=5

**************************​

இனி, புதையனாரின் சூத்திரம்:


ஓடிய நீளந்தன்னை - கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அளவுகளில் 



பெரிய அளவை,

ஓரெட்ட்டுக் கூறதாக்கி - எட்டு பாகங்களாக்கி,

கூறிலே ஒன்று தள்ளி- அதிலிருந்து ஒரு பாகத்தைக் கழித்து,

( பெரிய அளவான 4 ஐ எட்டு பாகங்களாக்கி, /அதிலிருந்து 



ஒரு பாகத்தைக் கழித்தால் வருவது மூன்றரை.

குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம்தானே.- 



குன்றம் என்பது கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு அளவு.

மற்றொரு அளவு மூன்றில் பாதி ஒன்றரை.

இதனுடன் ஏற்கனவே கணக்கிடப்பட்டு மீந்த 



அளவான மூன்றரையையும் சேர்த்தால் கிடைப்பது ஐந்து.

C=5



27.6.11


கொண்டாட்டங்களின் தேவதை அவள்.

என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி

சிரித்துக் கொண்டிருந்தாள்.

"கொண்டாடத் தெரியாதவன் என்பதால்

எள்ளி நகைக்கிறாயா" எனக் கேட்டேன் 

"இல்லை, நான்தான்

கொண்டாட்டங்களின் தேவதை என

நம்பிக் கொண்டிருக்கிறாயே 

அதை எண்ணி நகைக்கிறேன்" என்றாள்.